கடலுார்: 'டிட்வா' புயல் காரணமாக கடலுார் மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்த தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையையொட்டி தென்மேற்கு வங்கக்கடலில் உருவான, 'டிட்வா' புயல் இலங்கையில் கடும் மழையை கொடுத்துவிட்டு தமிழக கடற்கரையோரம் நெருங்கி வருகிறது. வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், சென்னையை கடந்து செல்லும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன்காரணமாக கடலோரப்பகுதியில் உள்ள தென் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்துள்ளது. இரவு நேரங்களில் கடும் குளிர் வாட்டி வருகிறது. குமராட்சி, சிதம்பரம், சேத்தியாதோப்பு, பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் கனமழையால் நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. குடிசை வீடுகள் பாதிப்பு கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலையில் நல்ல மழை பெய்தது. இதனால் விருத்தாசலம் உள்ளிட்ட பகுதியில், 19 குடிசை வீடுகள் சுவர் இடிந்து பாதிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் நிரம்பியுள்ளன. வண்ணாங்குளம், குண்டு உப்பலவாடி என்.ஜி,நகர். முல்லை தெரு, சண்முகா நகர், வண்டிப்பாளையம், பகுதிகளில் தாழ்வாக உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இரவு கடுமையான தரைக்காற்று வீசியது. விட்டுவிட்டு மழை பெய்ததால் மக்கள் செய்வதறியாமல் திகைத்தனர். மாவட்ட நிர்வாகம் தேவையில்லாமல் மக்கள் வெளியே நடமாட வேண்டம் என அறிவுறுத்தியது. நடமாட்டம் குறைவு கனமழையால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்ததால் வெறிச்சோடியது. நேற்று அதிகாலை முகூர்த்த தேதி என்பதால் மக்கள் பஸ்சுக்காக நெடுநேரம் காத்திருந்தனர். பல இடங்களில் தனியார் பஸ்கள் இயக்காமல் நிறுத்தி வைத்திருந்தனர். மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வியாபாரிகள் கடைகளை திறக்கவில்லை. கடல் சீற்றம் 'டிட்வா' புயல் நகரும் வேகம் மிகவும் குறைவாக இருப்பதால் தொடர்ந்து கடல் சீற்றமாக இருந்து வருகிறது. இதனால் கடல் அலை 6 அடி வரை உயர்ந்து கரையை மோதுகிறது. அதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி மீனவர்கள் கடந்த 3 நாட்களாக மீன்பிடிக்க செல்ல வில்லை. படகுகள் யாவும் கரையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், வெளி மாவட்ட மீன்கள் மற்றும் இறால்கள் கடலுாரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிக மழை கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சேத்தியாதோப்பு, கடலுார், கொத்தவாச்சேரி, சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம், வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. கடலுார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8:30மணி முதல் நேற்று காலை 8:30 மணி வரை பெய்த மழையளவு ( மி.மீ.,): சேத்தியாத்தோப்பு 124.1, ஸ்ரீமுஷ்ணம் 112, கடலுார் கலெக்டர் அலுவலகம் 99.3, கடலுார் 97.3, பண்ருருட்டி 40, வானமாதேவி 56, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி 61.5, குறிஞ்சிப்பாடி 62, கொத்தவாச்சேரி 71, வடக்குத்து 90, சிதம்பரம் 91, அண்ணாமலைநகர் 81, புவனகிரி 83, பரங்கிப்பேட்டை 99, காட்டுமன்னார்கோவில் 69, லால்பேட்டை 84, விருத்தாசலம் 46, குப்பனத்தம் 38.8, தொழுதுார் 49.4, பெலாந்துறை 41, கீழ்ச்செருவாய் 32, லக்கூர் 30.3, வேப்பூர் 65, மேமாத்துார் 25, கா ட்டுமயிலுார் 60மி.மீ.,