உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை 19.13 சதவீதம்... கூடுதல்

மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை 19.13 சதவீதம்... கூடுதல்

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் கடந்த வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 19 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.நம் நாட்டில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கத்தினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆழ் கடலில் வெப்பம் அதிகரித்து வருவதால் சுனாமி, அதிக வெப்பம், அதிக மழை, அதிவேக காற்று, பெருவெள்ளம் போன்றவை ஏற்படுவது இயல்பு என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் விளைவாக ஒரு சில இடங்களில் அதிக மழை பெய்து வெள்ளக்காடாக்குகிறது. சில இடங்களில் மழை பொழிவு இல்லாமலேயே கடும் வறட்சி நிலவுகிறது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் துவங்கி டிசம்பர் வரை நீடிக்கும். அதில் நவம்பர் மாதத்தில் தான் கனமழை கொட்டும். இந்த ஆண்டு அக்டோபர் 2வது வாரத்தில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. கடலுார் மாவட்டத்தில் 10 ஆண்டு சராசரி மழையளவு 1,200 மி.மீட்டர் ஆகும்.அதில் வடகிழக்கு காற்றின் மூலம் நமக்கு 790 மி,மீ., மழை பெய்ய வேண்டும். அக்டோபரில் 220 மி.மீ., மழை பெய்ய வேண்டும். அதற்கு 213.36 மி.மீ., மட்டுமே பெய்துள்ளது. இதில் 7 மி.மீ., குறைவாக பெய்துள்ளது. அதிகளவு மழைபெய்ய வேண்டிய நவம்பர் மாதத்தில் இயல்பு மழையான 295.30 மி.மீட்டருக்கு 211.84 மி.மீ., மழை பெய்துள்ளது. நவம்பர் மாதத்தில் மட்டும் 53.46 மி.மீ., குறைவான மழை பெய்துள்ளது. அதைத்தொடர்ந்து டிசம்பர் மாதம் லேசான மழை பெய்ய வேண்டி காலத்தில் புயல் சின்னம் காரணமாக கனமழை கொட்டியது. அதாவது 182.30 மி.மீட்டருக்கு 389.9 மி.மீ., மழை பதிவானது. ஆண்டு முழுவதும் பெய்ய வேண்டிய இயல்பு மழையான 1206.7 மி.மீட்டருக்கு 1437.6 மி.மீட்டர் பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழையில் மட்டும் 16.80 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளது. ஆண்டு மழையவில் 19.13 சதவீதம் கூடுதல் மழை கிடைத்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டில் 46 சதவீதம், 2008ம் ஆண்டு 36 சதவீதம், 2015ம் ஆண்டு 45 சதவீதம், 2017ம் ஆண்டு 20 சதவீதம், 2020ம் ஆண்டு 20 சதவீதம், 2021ம் ஆம் ஆண்டு 55 சதவீதம் கூடுதல் மழை கிடைத்துள்ளது.கடந்த பருவமழையில் நமக்கு கூடுதலாக மழை கிடைத்துள்ளதால் ஒரு சில இடங்களில் விவசாய போர்வெல்லில் இருந்து தாமாகவே தண்ணீர் வெளியேறியது. எனவே இந்த ஆண்டு விவசாயத்திற்கு நிலத்தடிநீர் பிரச்னை இருக்காது என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி