உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அதிகாரிகள் அதிரடி ஆய்வு 2,050 கிலோ விதை நெல் விற்க தடை

அதிகாரிகள் அதிரடி ஆய்வு 2,050 கிலோ விதை நெல் விற்க தடை

கடலுார் : கடலுார் மாவட்டத்தில், சிறப்பு விதை ஆய்வுக்குழு சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாத 2,050 கிலோ விதை நெல் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குநர் சரவணன், விழுப்புரம், கடலுார் மற்றும் விருத்தாசலத்தைச் சேர்ந்த விதை ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்புக்குழு காட்டுமன்னார்கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை, மேல்புவனகிரி, கீரப்பாளையம் மற்றும் குறிஞ்சிப்பாடி தாலுகாக்களில் உள்ள 18 அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது விற்பனைக்கு இருப்பு வைக்கப்பட்ட விதைக் குவியல்களின் தரத்தை அறிய விதை கொள்முதல் ஆவணங்கள். விற்பனை பட்டியல் தனியார் விதைகளுக்கான பதிவுச்சான்றுகள், விதை பகுப்பாய்வு முடிவறிக்கைகள், விதை இருப்பு பதிவேடு மற்றும் விற்பனை ரசீது ஆகியவை விதைச்சட்டப்படி பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விற்பனை ரசீதுகளில் குவியல் எண் மற்றும் காலாவதி நாள் குறிப்பிட்டு பட்டியல் வழங்க வேண்டும். விதைகள் பெறப்பட்டவுடன் பணி விதை மாதிரி எடுத்து விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி, முளைப்புத்திறனை உறுதி செய்த பிறகு, பருவத்திற்கேற்ற விதைகளை விவசாயிகளுக்கு வினியோகிக்க விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், தனியார் விதை விற்பனை நிலையங்களில் நான்கு விதைக் குவியல்களில் பதிவுச்சான்று, முளைப்புத்திறன் பரிசோதனை அறிக்கை மற்றும் விதைச்சான்று நடைமுறைகளின் படி பராமரிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் முறையாக இல்லை. இதனால், ஒரு லட்சத்து 97ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2,050 கிலோ விதை நெல் விற்பனை செய்ய உரிய விதைச்சட்ட விதிகளின் படி தடை விதிக்கப்பட்டது. ஆய்வின் போது விதை ஆய்வாளர்கள் ஜோதிமணி, செந்தில்குமார், தமிழ்ப்பிரியன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ