பள்ளி சமையல் கூடத்தில் காஸ் கசிவு அதிகாரிகள் விசாரணை
புவனகிரி : புவனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சமையல் நேரத்தில் காஸ் கசிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலுார் மாவட்டம், புவனகிரி அடுத்த ஆதிவராகநத்தத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுற்றுபகுதியைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் 1 முதல் 8 வகுப்பு வரை படிக்கின்றனர். பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் நோக்கில் நேற்று பள்ளியில் உள்ள சமையல் கூடத்தில், சுமதி,50; என்பவர் சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.காலை 10.30 மணிக்கு, சிலிண்டர் குழாயில் இருந்து காஸ் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது. உடன் ஆசிரியர்கள் பள்ளியில் இருந்த மாணவர்களை பாதுகாப்பாக வெளியே அழைத்துச்சென்றனர். இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு நிலவியது. உடன் சமையலர் பொதுமக்கள் உதவியுடன் சணல் சாக்கினைக் கொண்டு தீயை அணைத்தார். சம்பந்தப்பட்ட காஸ் நிர்வாகத்திலிருந்து ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, ரப்பர் குழாயை சரி செய்தனர். சம்பந்தப்பட்ட பள்ளியில் புவனகிரி வட்டார கல்வித்துறையினர், புவனகிரி ஊரகவளர்ச்சித்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தனர். இரண்டு மணி நேர இடைவெளிக்குப் பின் வழக்கம் போல் பள்ளி இயங்கியது.