மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாயம்
சேத்தியாத்தோப்பு; பெரியநற்குணம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. சேத்தியாத்தோப்பு அடுத்த பெரியநற்குணம் காலனி தெருவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. தொட்டியில் ஆங்காங்கே சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், மேல்நிலை தொட்டி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பொதுமக்கள் அவ்வழியாக செல்லும் போது அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். பெரிய அளவில் அசம்பாவித சம்பவம் நடப்ப தற்கு முன் தொட்டியை அகற்ற விட்டு புதிய தொட்டி கட்ட வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.