பிச்சாவரம் உப்பனாற்றில் புதிய ரெகுலேட்டர் பாண்டியன் எம்.எல்.ஏ., கோரிக்கை
சிதம்பரம்: சிதம்பரம் அடுத்துள்ள வடக்கு பிச்சாவரம் பகுதி, உப்பனாற்றின் குறுக்கே புதிய ரெகுலேட்டர் கட்டித் தர வேண்டும் என சிதம்பரம் எம்.எல்.ஏ.,சட்டசபையில் கோரிக்கை வைத்தார். தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், நேற்று கேள்வி நேரத்தின்போது, சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன் பேசியதாவது: சிதம்பரம் சட்டசபை தொகுதி, பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட, வடக்கு பிச்சாவரம் கிராமத்தில், உப்பனாற்றின் குறுக்கே 75 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ரெகுலேட்டர் தற்போது மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் உடையும் நிலையில் உள்ளதால், கடல் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்டால், கடல் நீர் உட்புகுந்து சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளை நிலங்கள் பாதிக்கப்படும். எனவே, பழுதடைந்த ரெகுலேட்டருக்கு பதிலாக புதிய ரெகுலேட்டர் அமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.