தலைமை ஆசிரியர் இடமாறுதல் கண்டித்து மாணவர்களின் பெற்றோர் சாலை மறியல்
விருத்தாசலம்: அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர் பணி மாறுதலை கண்டித்து, மாணவர்களின் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நில வியது. விருத்தாசலம் கஸ்பா டேனிஷ் மிஷன் நடுநிலைப் பள்ளியில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்த லிடியன் எபினேசர், நேற்று விழுப்புரம் மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். இதில், ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர், நேற்று காலை 10:45 மணியளவில் விருத்தாசலம் - காட்டுக்கூடலுார் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 'கல்வி ஆண்டின் இடையில் தலைமை ஆசிரியரை மாற்றம் செய்தால், மாணவர்களின் கல்வி பாதிக்கும்,' என கூறினர். அதற்கு போலீசார் 'இந்த பள்ளி ஆற்காடு லுார்தான் திருச்சபை பிஷப் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் முடிவு செய்து தான் பணி மாற்றம் செய்துள்ளனர். நீங்கள் சி.இ.ஓ., டி.இ.ஓ., உள்ளிட்ட கல்வி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடு ங்கள்' என கூறினர். இதனையேற்ற பெற்றோர், காலை 11:15 மணிக்கு அங்கிருந்து கலைந்து சென்றனர்.