உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வழித்தடங்களில் அரசு பஸ்கள் நிற்காததால்... பாதிப்பு; கடலுார்- சிதம்பரம் சாலையில் பயணிகள் அவதி

வழித்தடங்களில் அரசு பஸ்கள் நிற்காததால்... பாதிப்பு; கடலுார்- சிதம்பரம் சாலையில் பயணிகள் அவதி

பரங்கிப்பேட்டை: கடலுார்- சிதம்பரம் சாலையில், வழித்தடங்களில் அரசு பஸ்கள் நிற்காமல், நான்கு வழிச்சாலை மேம்பாலம் வழியாக சென்றுவிடுவதால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.விழுப்புரம்- நாகப்பட்டிணம் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. இதனால், பழைய சாலைகளில் வாகன போக்குவரத்து தற்போது குறைந்துள்ளது. இந்த வாய்ப்பை அரசு பஸ்கள் பயன்படுத்திக்கொண்டு, ஏற்கனவே, வட்டார போக்குவரத்து துறை அனுமதி அளித்த வழித்தடங்கள் வழியாக செல்லாமல், பெரும்பாலான அரசு பஸ்கள், விரைவு பஸ்கள் நான்கு வழிச்சாலை மேம்பாலம் வழியாக, சிதம்பரம் சென்று விடுகிறது. இதனால், புவனகிரி, பரங்கிப்பேட்டை, முட்லுார், புதுச்சத்திரம், பெரியப்பட்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக, இரவு நேரங்களில் கைக் குழந்தையுடன் நிற்கும் பெண்கள், முதியவர்கள் என அனைவரும் கால்கடுக்க நின்று பார்த்தும் பஸ் வராததால் தனியார் பஸ்கள் எப்போது வரும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மேலும், சிதம்பரத்தில் இருந்து சென்னை செல்லும் பெரும்பாலான அரசு விரைவு பஸ்கள் சிதம்பரத்தை விட்டால் நேராக நான்கு வழிச்சாலை மேம்பாலம் வழியாக கடலுாருக்கு சென்றுவிடுகிறது. மற்ற வழித்தடங்களில் எங்கும் நிற்பது இல்லை.கடந்த காலங்களில் அரசு பஸ்கள், அனைத்து வழித்தடங்கள் வழியாக சென்று பஸ் நிறுத்தங்களில் நிற்கும் பயணிகளை ஏற்றி செல்கிறார்களா என்பதை கண்காணிக்க, போக்குவரத்து கழகத்தில் செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் முக்கிய இடங்களில் நின்று கண்காணிப்பார்கள்.இதனால், அனைத்து அரசு பஸ் டிரைவர்களும் பஸ் நிறுத்தங்களில் பஸ்சை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்வார்கள். இதனால், அரசுக்கும் வருவாய் கிடைத்தது. தற்போது, அதுபோன்ற நிலை இல்லை.இதனால், பெரும்பாலான அரசு பஸ்கள் மற்றும் அரசு விரைவு பஸ்கள் நான்கு வழிச்சாலை மேம்பாலம் வழியாக சென்றுவிடுவதால், பஸ் பயணிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், பஸ் பயணிகளை ஏற்றிச்செல்லாததால் அரசுக்கும் இழப்பு ஏற்படுகிறது.எனவே, பஸ் பயணிகளின் நலன்கருதி, சிதம்பரத்தில் கடலுார் செல்லும், அரசு பஸ்கள் மற்றும் விரைவு பஸ்கள் நான்கு வழிச்சாலை மேம்பாலம் வழியாக செல்லாமல், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வழித்தடங்கள் வழியாக நின்று செல்ல மாவட்ட நிர்வாகம், விழிப்புரம் கோட்ட மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பஸ் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை