ஒரத்துார் சாலையில் நாற்று நடும் போராட்டம்
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்துாரில் சேறும் சகதியுமாக மாறிய சாலையை சீரமைக்க கோரி, பெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஒரத்துார் துாண்டில் வீரன்கோவில் தெருவைச் சேர்ந்த பெண்கள் நேற்று காலை 10:00 மணியளவில் சேறும் சகதியுமான சாலையில் திடீரென நாற்றுகளை நட்டு போராட்டம் செய்தனர். அவர்கள் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சாலை பழுதடைந்துள்ளதால் நடந்து கூட செல்லமுடியாத நிலை உள்ளது. அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. லேசான மழைபெய்தால் கூட சாலை சேறும் சகதியுமாக மாறி விடுகிறது.ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டால், நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதாக கூறுகின்றனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவித்தனர். அதிகாரிகள் யாரும் வராததால், 10:30 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு, பெண்கள் கலைந்து சென்றனர்.