குட்கா விற்றால் நோ பெயில் விருதையில் போலீஸ் அதிரடி
சிகரெட் மற்றும் ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களால் புற்றுநோய் ஏற்படுவதால், அதன்மீது எச்சரிக்கை விளம்பர படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும் 18 வயது நிரம்பாத சிறுவர்களுக்கு விற்பனை கிடையாது; பொது இடத்தில் புகை பிடிக்கக் கூடாது என எச்சரிக்கை போர்டுகள் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும், ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்து, அவற்றை விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. வெளி மாநிலங்களில் இருந்து குட்கா கடத்தலை தடுக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இருப்பினும் கடலுார் மாவட்டத்தில், ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் பங்க் கடைகளில் தாராளமாக கிடைத்தது.கடந்த காலங்களில் குட்கா பொருட்களை விற்போர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பெயிலில் விடுவது வாடிக்கையாக இருந்தது. இதனால் வழக்கு செலவுக்கு தகுந்தாற்போல குட்கா விலையும் அதிகரித்ததுடன், அதன் விற்பனையை தடுக்க முடியாமல் இருந்தது.தற்போது, குட்கா விற்போரை பாரபட்சமின்றி போலீசார் கைது செய்து, சிறைக்கு அனுப்புகின்றனர். விருத்தாசலம் பகுதியில் கடந்த சில மாதங்களாக ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா விற்ற பலர் கைது செய்யப்பட்டு, சிறைக்கு அனுப்பி வைக்கின்றனர். போலீஸ் நிலைய ஜாமினில் விடுவதில்லை. இதனால், விருத்தாசலம் பகுதிகளில் குட்கா விற்பனை வெகுவாக சரிந்துள்ளது.நகரம் மட்டுமல்லாது கிராமங்களிலும் குட்காவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு போலீசார் அதிரடி காட்டுவது, பொது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோல் பொது இடங்களில் புகை பிடிப்போரையும் தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.