சந்தையில் சாலையோர கடைகள் கண்டுகொள்ளாத போலீசார்
நெல்லிக்குப்பம் : காராமணிக்குப்பம் சந்தையில் சாலையோரம் கடைகள் போடுவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை வாரச்சந்தை நடக்கிறது. இங்கு, ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள், கருவாடு்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதேப் போன்று, 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி வியாபாரம் செய்கின்றனர்.ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த இடத்தில் போதுமான இடவசதி உள்ளதால் வியாபாரிகள் சாலையோரம் கடை போட கூடாது என்பதால் வேலி அமைத்தனர். ஆனால் 50க்கும் மேற்பட்ட கடைகளை கடலுார் - பண்ருட்டி சாலையோரமும், வாகனங்களை நிறுத்தியும் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால், சாலையிலேயே மக்கள் நின்று பொருட்கள் வாங்குவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. ேஷர் ஆட்டோக்களை சாலையோரம் நிறுத்தி வைக்கின்றனர்.சந்தையை ஏலம் எடுத்தவரும் பாதுகாப்புக்கு செல்லும் போலீசார், சாலையோரம் கடைபோடுவதையும், ஆட்டோக்களை சாலையில் நிறுத்துவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தாலும் சாலையோரம் கடைகள் போடுவது தொடர்கிறது. எனவே, இனியாவது சாலையோரம் கடைகள் அமைக்காமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.