உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரத்தில் மேலும் 27 இடங்களில் கேமரா குற்றங்களைத் தடுக்க போலீஸ் நடவடிக்கை

சிதம்பரத்தில் மேலும் 27 இடங்களில் கேமரா குற்றங்களைத் தடுக்க போலீஸ் நடவடிக்கை

சிதம்பரம் : சிதம்பரம் பகுதியில் நடைபெறும் திருட்டு மற்றும் குற்றங்களை தடுக்கும் வகையில், புறவழிச்சாலை உட்பட மேலும் 27 இடங்களில் போலீசார் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர். சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவில் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் இருப்பதால், வெளியூர் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமனோர் சிதம்பரம் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் வாகன திருட்டு, வங்கியில் இருந்து பணம் கொண்டு செல்பவர்களிடம் திருட்டு, வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்கள் என அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இது போன்று நடைபெறும் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில், நகரின், முக்கிய இடங்களில், 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை, ஆய்வு செய்யும், தனிப்படை போலீசார் குற்றவாளிகளை சுலபமாக கைது செய்து வருகின்றனர். ஆனாலும் ஒரு சில குற்றங்களில், கேமராவில் பதிவாகியிருந்தாலும், குற்றவாளிகளை பிடிப்பது சவாலாக உள்ளது. குறிப்பாக, தற்போது விழுப்புரம் - நாகை புறவழிச்சாலை சாலை பயன்பாட்டிற்கு வந்தபின், சிதம்பரத்தையொட்டி இச்சாலை செல்வதால், குற்ற செயல்களில் ஈடுபடுவோர் புறவழிச்சாலை வழியாக தப்பிச் செல்கின்றனர். இதனைத் தவிர்க்கும் வகையில், மேலும் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி, சிதம்பரம் வண்டிகேட், சீர்காழி புறவழிச்சாலையில் பொய்யா பிள்ளை சாவடி, அம்மாபேட்டை, கடவாச்சேரி, சின்ன மார்க்கெட், கோவிந்தசாமி நகர் உட்பட 27 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை