ஆரம்ப சுகாதார நிலையம்; கிராம மக்கள் கோரிக்கை
பெண்ணாடம் ; தாழநல்லுாரில் சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெண்ணாடம் அடுத்த தாழநல்லுார் கிராமத்தைச் சுற்றி தீவளூர், கோனுார், காரையூர், வடகரை, நந்திமங்கலம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இக்கிராமங்கள் 20 கி.மீ., துாரமுள்ள கணபதிகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்டது. இப்பகுதி மக்கள் கணபதிகுறிச்சி சுகாதார நிலையத்திற்கு நேரடியாக பஸ் வசதி இல்லாததால் பெண்ணாடம், வெண்கரும்பூர் மற்றும் முருகன்குடி பஸ் நிறுத்தம் சென்று அங்கிருந்து 3 முதல் 4 கி.மீ., துாரம் வரை நடந்து செல்ல வேண்டும்.இதனால் கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், முதியோர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே, தாழநல்லுாரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.