ரேஷன் கார்டு ஒப்படைப்பு போராட்டம்; கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகம் முன், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.குறிஞ்சிப்பாடி அடுத்த ரெட்டியார்பேட்டை கிராமத்தில் 232 ரேஷன்கார்டு தாரர்கள் உள்ளனர். அப்பகுதிக்கு தனியாக ரேஷன் கடை அமைக்கக் கோரி கடந்த 8 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன்கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டத்தை அறிவித்தனர். மா.கம்யூ., ஒன்றியக்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். ரெட்டியார்பேட்டை கிராம தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, அஞ்சப்பன் முன்னிலை வகித்தனர். மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ்கண்ணன், அமர்நாத், ஒன்றிய செயலாளர் பட்சாட்சரம், தட்சிணாமூர்த்தி மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலக்தை முற்றுகையிட்டு ரேஷன் கார்டை ஒப்படைக்க முயன்றனர்.இதையடுத்து அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.