உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உள்ளாட்சி பதவி காலம் முடிந்ததால் அதிகாரிகள் ராஜ்ஜியத்தால் அடிப்படை வசதியின்றி மக்கள் தவிப்பு கிராமங்களில் தொடரும் போராட்டம்

உள்ளாட்சி பதவி காலம் முடிந்ததால் அதிகாரிகள் ராஜ்ஜியத்தால் அடிப்படை வசதியின்றி மக்கள் தவிப்பு கிராமங்களில் தொடரும் போராட்டம்

ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் முடிந்து, ஒன்றிய அதிகாரிகள் வசம் நிர்வாகம் வந்தது. இதனால் ஊராட்சி செயலாளர்கள் மூலம் பி.டி.ஓ.,க்கள், ஒன்றிய பொறியாளர்கள், ஓவர்சீயர்கள் மேற்பார்வையில் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்.ஆனால் பல கிராமங்களில் சீரான குடிநீர் விநியோகம் இன்றியும், சுகாதாரமற்ற குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளது. சமீபத்தில் திட்டக்குடி தாலுகா, தீவளூர் கிராமத்தில் சுகாதாரமற்ற குடிநீரை குடித்து கிராம மக்கள் பலர் பாதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதில் மஞ்சள் காமாலையால் பாதித்த 13 வயது சிறுவன் இறந்தது குறிப்பிடத்தக்கது.அதேபோன்று, விருத்தாசலம் ஒன்றியம் எருமனுார், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் ஏ.வல்லியம் உள்ளிட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து சாலை மறியல் போராட்டங்கள் நடந்தது. காலை நேரத்தில் நடந்த போராட்டங்களால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர்.வெயில் காலத்தில் மக்களுக்கு கூடுதலாக தண்ணீர் தேவைப்படும் நிலையில் போர்வெல் பழுது, சுகாதாரமின்றி குடிநீர் வினியோகம் போன்ற குளறுபடிகளை தடுக்க வேண்டும்.இது குறித்து அந்தந்த ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் ஊராட்சி செயலாளர்களுடன் சிறப்பு கூட்டம் நடத்தி, கிராமங்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிட உத்தரவிட வேண்டும்.ஊராட்சி தலைவர்கள் பதவிக்காலத்தில் கிராம மக்களிடம் நற்பெயர் பெற வேண்டும் என சொந்த செலவிலேயே அடிப்படை தேவைகளை நிறைவேற்றினர். ஆனால், அதிகாரிகள் வசம் இருப்பதால் கிராம மக்களை கண்டுகொள்ளவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ