நல்லுாரில் பஸ் நிலையம் பொதுமக்கள் கோரிக்கை
வேப்பூர்: நல்லுாரில் பஸ் நிலையம் கட்டித்தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நல்லூர் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, துணை மின் நிலையம், சார்ப்பதிவாளர் அலுவலகம், அரசு மேல்நிலைப் பள்ளி, பிரசித்தி பெற்ற வில்வனேஸ்வரர் கோவில், வங்கி, வணிக வளாகங்கள் உள்ளன. இதனால், சுற்றுப்புற கிராம மக்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், வணிகர்கள், அரசு ஊழியர்கள் தினசரி வந்து செல்கின்றனர்.நல்லூர் கிராமத்திற்கு விருத்தாசலம், வேப்பூர் திட்டக்குடி பகுதிகளிலிருந்து 10க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்குகிறது. இந்நிலையில், நல்லுாரில் பஸ் நிலையம் இல்லாததால் பெண்ணாடம் - மங்கலம்பேட்டை, மேமாத்துார் அணைக்கட்டு - சேப்பாக்கம் சாலை இணையும் முக்கிய பகுதியில் பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றி செல்கின்றனர். மேலும், அவ்வழியே சாலையோரங்களில் பஸ்களை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, நவீன வசதிகளுடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்டித்தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.