விழுப்புரம் - தாம்பரம் பயணிகள் ரயிலை நீட்டிக்க முடியாது; எம்.பி.,க்கு ரயில்வே நிர்வாகம் பதில் : 4 மாவட்ட மக்கள் அதிருப்தி
தி ருச்சி - சென்னை, கடலுார் - சேலம் மார்க்கத்தில், விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷன் முக்கிய சந்திப்பு. இவ்வழியாக வந்தே பாரத், தேஜாஸ், ஹம்சஃபார் உள்ளிட்ட சிறப்பு ரயில்களும்; சூப்பர் பாஸ்ட், எக்ஸ்பிரஸ், பாசஞ்சர், சரக்கு என தினசரி ஐம்பதுக்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. கல்வி, மருத்துவம், வியாபாரம் என தினசரி ஆயிரக்கணக்கானோர் பயனடைகின்றனர். இங்கிருந்து விருத்தாசலம் மட்டுமல்லாது நெய்வேலி, மங்கலம்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம், பெண்ணாடம், திட்டக்குடி, வேப்பூர் மற்றும் அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை ஒட்டிய 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்னை, திருச்சி, மதுரை போன்ற பெருநகரங்களுக்கு சென்று வருகின்றனர். இதனால் மாதந்தோறும் 2 கோடி ரூபாய்க்கு ரயில்வே நிர்வாகத்துக்கு வருவாய் கிடைக்கிறது. ஆனால், தலைநகரான சென்னைக்கு நேரடி ரயில் சேவை இல்லாமல் திருச்சி, மதுரை, காரைக்குடி, கொல்லம், குருவாயூர் போன்ற பகுதிகளில் இருந்து வரும் ரயில்களில் மூன்று மணி நேரத்திற்கு பொதுப்பயண பெட்டியில் நின்றபடி செல்லும் அவலம் தொடர்கிறது. இதனால் முதியோர், குழந்தைகளுடன் வரும் பெண்கள் மிகுந்த சிரமமடைகின்றனர். குறிப்பாக பண்டிகை விடுமுறை நாட்களில் நிற்க கூட இடமின்றி படிகளில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் அவலம் தொடர்கிறது. இதையடுத்து, விழுப்புரம் - தாம்பரம் பாசஞ்சர் ரயிலை விருத்தாசலத்தில் இருந்து நீட்டிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனில் தினசரி காலை 5:20 மணிக்கு புறப்பட்டு, தாம்பரம் ரயில் நிலையத்துக்கு காலை 8:30 மணிக்கு சென்றடைகிறது. அதுபோல், மாலை 6:00 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு, இரவு 9:20 மணிக்கு விழுப்புரம் வந்தடைகிறது. இந்த ரயிலை விருத்தாசலத்தில் இருந்து காலை 4:30 மணிக்கு புறப்பட செய்தால், தினசரி 500க்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைவார்கள். இதன் மூலம் பயணிகளுக்கு நேரடி ரயில்சேவை கிடைப்பதுடன், ரயில்வே நிர்வாகத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். மேலும், இரவில் சென்னையில் தங்குவது தவிர்க்கப்பட்டு, அன்றாடம் வீட்டிற்கு வந்தடையும் வசதி கிடைக்கும். இதனால் இட நெருக்கடி, உணவு, குடிநீர் போன்ற தட்டுப்பாடுகள் தவிர்க்கப்படும். இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் பலமுறை செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, விழுப்புரம் - தாம்பரம் பயணிகள் ரயிலை நீட்டிக்க வேண்டும் என கடலுார் எம்.பி., விஷ்ணு பிரசாத் ரயில்வே அமைச்சரை சந்தித்து மனு கொடுத்தார். ஆனால், விழுப்புரம் - தாம்பரம் பயணிகள் ரயிலை நீட்டிக்க முடியாது எனவும், நிர்வாக ரீதியாக சிக்கல் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் பதிலளித்துள்ளார். குறிப்பாக, தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வந்தடையும் பாசஞ்சர் ரயிலை சுத்தப்படுத்தும் வகையில் விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனில் வசதி இல்லை என தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இது கடலுார் உட்பட நான்கு மாவட்ட பொது மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மாற்றாக, விழுப்புரம்-தாம்பரம் பயணிகள் ரயிலை நீட்டித்து, அந்த ரயில் தினசரி விருத்தாசலம் வந்து பயணிகளை இறக்கி விட்டதும், விழுப்புரத்திற்கு மீண்டும் எடுத்துச் செல்லலாம் அல்லது விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனில் ரயில்களை சுத்தம் செய்யும் வகையில் நடமாடும் இயந்திரங்களை பயன்படுத்தலாம் என ரயில்வே ஊழியர்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து ரயில்வே ஊழியர் ஒருவர் கூறுகையில், 'கடலுார் உட்பட நான்கு மாவட்ட மக்களின் நலன் கருதி, விழுப்புரம் - தாம்பரம் பாசஞ்சர் ரயிலை நீட்டிப்பு செய்யலாம். தினசரி பயணிகளை இறக்கி விட்டதும், விழுப்புரம் எடுத்துச் சென்று சுத்தம் செய்து, அதிகாலையில் மீண்டும் எடுத்து வரலாம். இது சாத்தியம் இல்லாவிட்டால், விருத்தாசலம் ரயில்வே ஸ்டேஷனில் நடமாடும் சுத்தம் செய்யும் இயந்திரங்களை பயன்படுத்தலாம். மக்கள் வசதிக்காக எதுவும் செய்யலாம்' என்றார். எனவே, விழுப்புரம் - தாம்பரம் பாசஞ்சர் ரயிலை விருத்தாசலத்தில் இருந்து நீட்டிப்பு செய்து, நான்கு மாவட்ட மக்களின் வேண்டுகோளை நிறைவேற்ற ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.