மேலும் செய்திகள்
விழிப்புணர்வு நிகழ்ச்சி
20-Nov-2025
ராமநத்தம்: ராமநத்தம், வேப்பூர் பகுதிகளில் மினி உழவர் சந்தை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. திட்டக்குடி மற்றும் வேப்பூர் தாலுகாவில், 160க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அதில், மாவட்டத்தின் கடைக்கோடியிலுள்ள ராமநத்தம் மற்றும் வேப்பூர் பகுதிகளை சுற்றியுள்ள, 80க்கும் அதிகமான கிராமங்களில், பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இப்பகுதிகளில், தோட்டக்கலை பயிர்களான கீரை வகைகள், கத்தரி, வெண்டை, அவரைக்காய், கொத்தவரை, சுரைக்காய், பூசணி, வாழை, மரவள்ளி போன்றவைகளை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். விளைந்த பொருட்களை இரு சக்கர வாகனங்களில் பல கிராமங்களுக்கு கொண்டு சென்று விற்று வருவாய் ஈட்டுகின்றனர். அதில், போதிய லாபம் கிடைக்காமல் விவசாயிகள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்தாண்டு விவசாயிகளிடம் நேரடியாக காய்கறி, பழங்களை வாங்கி, மக்களுக்கு குறைந்த விலையில் விற்க, தாலுகா தோறும், 20 அங்காடிகள் இடம்பெறும் வகையில், 1,500- 2,000 சதுர அடியில் மினி உழவர் சந்தை அமைக்க, கூட்டுறவுத்துறை தீர்மானித்தது. ஆனால் தற்போது வரை அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. திட்டக்குடி தாலுகாவில், ராமநத்தம் பகுதியிலும், வேப்பூர் தாலுகாவில், வேப்பூரிலும் மினி உழவர் சந்தை அமைத்தால், அதனை சுற்றியுள்ள கிராம விவசாயிகளின் விளை பொருட்களை நஷ்டமின்றி விற்பனை செய்ய வாய்ப்பாக அமையும். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
20-Nov-2025