மழையில் சேதமான நெல் மூட்டைகள் பசுமை தாயகம் தலைவர் பார்வை
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் முளைப்பு ஏற்பட்டு சேதமடைந்த நெல் மூட்டைகள் குறித்து பா.ம.க., பசுமை தாயகம் தலைவர் சவுமியா பார்வையிட்டார். கடலுார் மாவட்டத்தில், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் குறுவை அறுவடை முடிந்து நெல் மூட்டைகள் சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்தது. மழை காரணமாக நெல் மணிகள் முளைப்பு ஏற்பட்டது. இந்நிலையில் முளைப்பு ஏற்பட்டு சேதமான நெல் மூட்டைகளை நேற்று பசுமை தாயக தலைவர் சவுமியா அன்புமணி பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், 'குறுவை அறுவடை நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து குடோன்களில் அடுக்கி வைத்து பாதுகாப்பாக வைப்பதற்கு பதிலாக இங்கு திறந்த வெளியில் அடுக்கி வைத்துள்ளனர். கடந்த வாரம் பெய்த கனமழையால் நெல் மூட்டைகள் நனைந்து முளைப்பு ஏற்பட்டுள்ளது. இங்கு 7,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துவிட்ட நிலையில் கொள்முதல் செய்த நெல்லை அரசு அதனை பாதுகாப்பான இடங்களில் வைக்க தவறிவிட்டது. விவசாயிகள் அரும்பாடுபட்டு உயிரை பணயம் வைத்து உற்பத்தி செய்யும் நெல் தானியங்கள் சேதமடைந்து வருவது மிகவும் வருத்தமளிக்கிறது. தமிழகம் முழுதும் 4 லட்சம் மெட்ரிக் டன்னிற்கு மேல் மழையில் சேதமடைந்துள்ளது. மாவட்டத்தை சேர்ந்த வேளாண் அமைச்சர் விவசாயிகள் உற்பத்தி செய்து கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்' என்றார். வழக்கறிஞர் பாலு, கடலுார் தெற்கு மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ், மாநில வன்னியர் சங்க செயலாளர் விஷ்ணு, மாவட்ட துணை செயலாளர் செந்தில், ஒன்றிய செயலாளர் சரண்ராஜ், முருகானந்தம், அருளாளன், சங்கர், நகர செயலாளர் கலைமணி, இளங்கோவன் உளளிட்ட பலர் உடனிருந்தனர்.