கடலுாரில் ரூ.4.50 கோடியில் வணிக வளாகம்... விரைவில்
கடலுார்: கடலுார் மாநகராட்சிக்கு வருவாயை பெருக்கும் பொருட்டு 50 கடைகள் கொண்ட வணிக வளாகம் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.கடலுார் மாநகராட்சியில் மொத்தம் 45 வார்டுகள் உள்ளன. மக்கள் தொகை 2 லட்சம் உள்ளது. இது தவிர மாநகராட்சி அருகில் உள்ள புதிய நகர்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். பெருநகராட்சியாக இருந்த கடலுார் கடந்த 2021 ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டது.அதன் பின்னர் கமிஷனராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கடலுார் சில்வர் பீச்சில் ரூ.5 கோடியில் அழகுபடுத்தும் பணி, மாநகராட்சி சுப்ராயலு பூங்கா விரிவாக்கம், பழைய கலெக்டர் அலுவலக சாலையில் நடைபாதை போன்ற வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வருவாய் குறைவாக இருப்பதால் கடைகள் மூலம் வருவாய் ஈட்ட மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி மைதானத்தில் பீச் ரோடு, பழைய கலெக்டர் அலுவலக சாலை ஆகிய இடங்களில் கலைஞரின் மேம்பாட்டு திட்டத்தின் வணிக வளாகம் கட்ட ரூ.4.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக நேற்று பழைய கலெக்டர் அலுவலக சாலையில், த.மா.கா., அலுவலகம் அருகே வணிக வளாகம் கட்டம், பொக்லைன் உதவியால் பள்ளம் தோண்டினர்.இதையறிந்த காங்., மாவட்டத் தலைவர் திலகர், நகர தலைவர் வேலுசாமி, த.மா.கா.,வைச் சேர்ந்த பி.ஆர்.எஸ்.வெங்கிடேசன், ராமராஜ் உட்பட பலர் திரண்டு வந்து பள்ளம் தோண்டும் பணியை தடுத்து நிறுத்தினர்.அலுவலகத்திற்கு எதிரெ கடைகள் கட்டினால், த.மா.கா., சார்பில் கட்டும் கடைகளை மறைக்கும் என்றதால், பள்ளம் தோண்டும் பணி பதியில் நிறுத்தப்பட்டது. விரைவில் பணி தொடங்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
போனியாகாத கடைகள்
மாநகராட்சியில் ஏற்கனவே பஸ் நிலையத்திற்குள் உள்ள கடைகள் சரியாக 'போனியாகாமல்' உள்ளன. இது தவிர பஸ் நிலையம் முகப்பில் ஒரு மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதில் தரை தளம் மட்டுமே வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மாடியில் உள்ள கடைகள் ஏலம் போகாமல் உள்ளன. இந்த நிலையில் புதிய வணிக வளாகம் கட்டினால் வருவாய் கூடுமா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.