உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காட்டுமன்னார்கோவில் டெல்டாவில் சம்பா சாகுபடி அறுவடை தீவிரம்

காட்டுமன்னார்கோவில் டெல்டாவில் சம்பா சாகுபடி அறுவடை தீவிரம்

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி நெல் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது.காட்டுமன்னார்கோவில், குமராட்சி டெல்டா பகுதியில் 50 ஆயிரம் ஏக்கர் ஒரு போக சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டது. சம்பாவில் பி.பி.டி., - ஏ.டி.ட்டி.13,- கோ 53,- என்.எல்.ஆர் போன்ற நெல் ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் பெய்த வடக்கிழக்கு பருவ மழையில் டெல்டாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சம்பா நெல் பயிர்கள் பூ வந்த நிலையிலும், சூல் பயிர் நிலையில் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது. விவசாயிகள் வயல்களில் தண்ணீர் வடியவைத்து, நெல் பயிர்களுக்கு உரம், பூச்சு மருந்து தெளித்து சேதத்தில் இருந்து மீட்டு எடுத்தனர்.இந்நிலையில், காட்டுமன்னார்கோவில் டெல்டாவில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெல் பயிர்களை இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்வதை விவசாயிகள் துவங்கியுள்ளனர். முட்டம், மோவூர், தெற்கிருப்பு, மேலகடம்பூர், எடையார் போன்ற பல கிராமங்களில் அறுவடை நடக்கிறது. டெல்டாவில் ஆட்கள் பற்றாக்குறை என்பதால், அறுவடை இயந்திரங்கள் மூலம் நெல் அறுவடை செய்யப்படுகிறது. வரும் வாரங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் அறுவடை பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி