சப்த விநாயகர் கோவிலில் சம்வத்ஸராபிஷேக விழா
கடலுார் : நெய்வேலி ஆர்ச் கேட் சப்த விநாயகர் கோவிலில் சம்வத்ஸராபிஷேக விழா நடந்தது.நெய்வேலி ஆர்ச் கேட் அருகில் உள்ள அண்ணா கிராமத்தில் காஞ்சி சங்கரமடத்தைச் சேர்ந்த சப்த விநாயகர் கோவிலில், வருஷாபிஷேகம் எனப்படும் ஸம்வத்ஸராபிஷேக விழாவையொட்டி கடந்த 5ம் தேதி காலை கணபதி ஹோமம், சுயம்வர கலா பார்வதி ஹோமம், சந்தான கோபால கிருஷ்ணன் ஹோமம், திருமணம் நடைபெறவும், குழந்தை செல்வம் கிடைக்கவும் பிரார்த்தனை செய்யப்பட்டு ஹோமம் நடந்தது. மாலை முதல் கால யாசாலை பூஜை துவங்கியது. நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால யாக பூஜைகள், தம்பதி பூஜை, வடுக பூஜை, சுகாசினி பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சப்த விநாயகர், மகா பெரியவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. மாலை ஆன்மிக சொற்பொழிவாளர் மணிகண்டன், 'ஆன்மிகத்தில் ஆனந்தம்' என்ற தலைப்பில் பேசினார். விழாவில் கோவிலை நிர்மாணித்த மகாலிங்கம் மகன்கள் ராஜ்குமார், ரமேஷ், சுரேஷ் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சப்த விநாயகர் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர். டிரஸ்ட் செயலாளர் ராஜேஷ், பொருளாளர் சுரேஷ் தலைமையில் அனைத்து நிகழ்ச்சிகளும் நடந்தது.