உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருமண மண்டபத்திற்கு சீல் விருத்தாசலத்தில் பரபரப்பு

திருமண மண்டபத்திற்கு சீல் விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் சொத்து வரி செலுத்தாத திருமண மண்டபத்திற்கு நகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்ததால் பரபரப்பு நிலவியது. விருத்தாசலம் நகராட்சிக்கு தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரிபாக்கி ரூ.1 கோடியே 40 லட்சம் நிலுவையில் உள்ளது.நகராட்சி மேலாளர் கனிமொழி தலைமையில், நகரமைப்பு ஆய்வாளர் செல்வம், வருவாய் ஆய்வாளர் ஷகிலா பானு, வருவாய் உதவியாளர் ரவி, முருகேசன் ஆகியோர் கொண்ட குழுவினர், ஒவ்வொரு தொழில் நிறுவனங்களுக்கும் சென்று சொத்து வரி பாக்கியை வசூலித்து வருகின்றனர்.மேலும், ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் நிலுவை வைத்துள்ள தொழில் நிறுவனங்களில் ஜப்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில், முல்லை நகரில் உள்ள முகமது ஹனிபா என்பவருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 232 ரூபாய் வரிபாக்கி பாக்கி இருந்தது. இதுசம்பந்தமாக கடந்த 9ம் தேதி ஜப்தி நோட்டீஸ் ஒட்டியும் இதுவரை வரி பணம் கட்டவில்லை.இதனால், நேற்று அங்கு சென்ற நகராட்சி அதிகாரிகள், திருமண மண்டபத்தை பூட்டி சீல் வைத்தனர். அதேபோல், வரிபாக்கி உள்ள தொழில் நிறுவனங்களுக்கு சென்று ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள போவதாக கூறி, நகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர்.இச்சம்பவத்தால் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !