சில்வர் பீச் வெறிச்
கடலுார்: மழை காரணமாக கடலுார் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் வெறிச்சோடி காணப்பட்டது.தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களை நெருங்கி வருகிறது. இதனால், கடலுார் தாழங்குடா, தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் சீற்றம் அதிகரித்து ராட்சத அலைகள் எழுந்து வருகிறது.நேற்று முன்தினம் நள்ளிரவு கடல் சீற்றம் காரணமாக, தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில், கரை பகுதிக்கு அலை வந்தது. இதனால், அங்கிருந்த கடைகளை கடல் நீர் சூழ்ந்தது. இதையடுத்து, வியாபாரிகள் தங்கள் கடையின் பொருட்களை எடுத்துச்சென்று பாதுகாப்பாக வைத்தனர்.மேலும், குழந்தைகள் விளையாட்டு சாதனங்களை கடல் அலை அடித்துச்சென்று கரையோரம் விட்டது. கடல்சீற்றம் அதிகரித்து காணப்படுவதால், சில்வர் பீச்சிற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதற்காக சில்வர் பீச் பகுதியில் பேரிகார்டுகள் வைத்து போலீசார் தடுப்புகள் அமைத்துள்ளனர். இதனால், கடந்த மூன்று நாட்களாக சில்வர் பீச் வெறிச்சோடி காணப்படுகிறது.