வாங்காத பொருளுக்கு எஸ்.எம்.எஸ்.,: குடும்ப அட்டைதாரர்கள் அதிருப்தி
மந்தாரக்குப்பம்; மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் வாங்காத பொருளுக்கும், வாங்கியதாக எஸ்.எம்.எஸ்., வருவதால் குடும்ப அட்டைதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்து, அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டுதாரர்கள் அனைத்து ரேஷன் பொருட்களையும் வாங்க ஆர்வம் காட்டுவதில்லை. சர்க்கரை உள்ளிட்ட சில பொருட்களை மட்டுமே ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதனை சாதகமாக்கி கொள்ளும் ரேஷன் கடை ஊழியர்கள், வாங்காத பொருளுக்கும் பதிவு செய்து விடுகின்றனர்.பதிவு செய்ததும், வாங்காத பொருட்கள் வாங்கியதாக குடும்ப அட்டைதாரர்கள் மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்., வந்துவிடுகிறது. மந்தாரக்குப்பம் பகுதியில் இதுபோன்று, எஸ்.எம்.எஸ்., அதிகம் வருவதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். இதனால் ரேஷன் கடைக்காரர்கள் வாங்காத பொருட்களுக்கான தொகையை செலுத்தி அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை பதுக்குவதாகவும், அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கின்றனர்.