கோவில்களில் ஆன்மிக நுால் விற்பனை நிலையங்கள் காட்சிப்பொருளாக மாறி உள்ளதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தி.மு.க., ஆட்சிப் பொறுப்பேற்றதும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமையான கோவில்களுக்கு கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. அதுபோல், நடப்பு கூட்டத்தொடரில், 100க்கும் மேற்பட்ட கோவில்களில் கும்பாபிேஷகம் நடத்திட நிதியும் ஒதுக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் இருந்து பெறப்படும் பக்தர்களின் காணிக்கை மூலம் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகிறது. அதுபோல், கடந்த ஏப்ரல் மாதத்தில், பிரசித்தி பெற்ற 100 கோவில்களில் ஆன்மிக நுால் விற்பனை நிலையங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். தலா 5 லட்சம் மதிப்பில் திறக்கப்பட்ட புத்தக விற்பனை நிலையங்களில் பக்தி இலக்கியங்கள், தல புராணங்கள், அருட்பணி செய்த அருளாளர்களின் வரலாறு, கோவில் கலை நுால்கள், சிலை நுால்கள், காவிய நுால்கள், ஓவிய நுால்கள், தொன்மை வாய்ந்த பழந்தமிழ் ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட நுால்கள் வைக்கப்பட்டன. அதன்படி, விருத்தாசலத்தில் உள்ள பழமையான விருத்தகிரீஸ்வரர் கோவில், கொளஞ்சியப்பர் உட்பட, 6 கோவில்களில் நுால் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டன. ஆனால், அந்தந்த கோவில்களில் உள்ள மூலவர்களை போற்றும் நுால்கள் இருப்பு இல்லை. கந்தர்சஷ்டி கவசம், கந்த புராணம், திருப்புகழ், திருப்பாவை, உள்ளிட்ட முக்கிய நுால்கள் இல்லாமல் இதர நுால்கள் இருப்பதால், பக்தர்கள் அவற்றை விரும்பி வாங்குவது இல்லை. இதனால் ஆன்மிக நுால் விற்பனை நிலையங்கள் காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளன. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் அந்தந்த மூவலர்கள் உரிய நுால்கள், தல வரலாறு போன்றவற்றை விற்பனைக்கு வைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.