பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி சதவீதம் உயர்த்த நடவடிக்கை; கலெக்டர் தகவல்
கடலுார்: பிளஸ் 2 மாணவர்களின் காலாண்டு தேர்வு தேர்ச்சி தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் மற்றும் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன், மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியதாவது; 2025----26ஆம் கல்வி யாண்டில் கடலுார் மாவட்டத்தில் 75 அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 வகுப்பில் 11,894 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதில், காலாண்டு தேர்வை 11,570 மாணவர்கள் எழுதினர். 324 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.10,150 மாணவர்கள் முழு தேர்ச்சியும், 1,420 மாணவர்கள் குறைவான மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். காலாண்டு தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை, ஒரு பாடம் மற்றும் இரண்டு பாடங்களில் குறைவான மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, கூடுதலாக தேர்ச்சி பெறாத மாணவர்களின் எண்ணிக்கை, குறைந்த மதிப்பெண் சதவீதம் பெற்ற பள்ளிகள் எண்ணிக்கை மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து தலைமை ஆசிரியர்களுடன் ஆய்வு நடத்தப்பட்டது. மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்துவதற்காக இனிவரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, திட்டமிடுதல், கூடுதல் கண்காணிப்பு, சிறப்பு வகுப்புகள் நடத்துதல், தேர்ச்சி பெறாதாதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தவும், 100 சதவீதம் தேர்ச்சி என்ற இலக்கை அடையவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.