உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிணற்றில் விழுந்து மாணவர் பலி பள்ளி நேரத்தில் நடந்த சோகம்

கிணற்றில் விழுந்து மாணவர் பலி பள்ளி நேரத்தில் நடந்த சோகம்

ராமநத்தம் : ராமநத்தம் அருகே இயற்கை உபாதைக்காக பள்ளியில் இருந்து வெளியே சென்ற மாணவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த வி.சித்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் பாலமுருகன், 14; கீழக்கல்ப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு நேற்று சென்ற பாலமுருகன், மதியம் 3:00 மணிக்கு இயற்கை உபாதை செல்வதாக ஆசிரியரிடம் கூறிவிட்டு, பள்ளியை விட்டு வெளியே சென்றார். பாலமுருகன் நீண்ட நேரமாகியும் வரவில்லை. அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், மாணவர்கள் தேடி பார்த்த போது, பள்ளிக்கு அருகில் உள்ள ராமசாமி என்பவரின் 60 அடி ஆழ விவசாய கிணற்றின் அருகே மாணவரின் காலணிகள் மற்றும் பெல்ட் உள்ளதை கண்டறிந்தனர். தகவலறிந்த ராமநத்தம் போலீசார் மற்றும் திட்டக்குடி தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி பாலமுருகனை சடலமாக மீட்டனர். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், இயற்கை உபாதைக்காக பாலமுருகன் சென்ற போது, கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தெரிந்தது. பள்ளியின் கழிவறையை மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதும், பள்ளியின் ஒரு பகுதியில் சுற்றுச்சுவர் இல்லாததால் எளிதாக மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியே சென்று வருவதும் தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை