உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் மாவட்டத்தில் கரும்பு விவசாயிகள் ஏமாற்றம்! மத்திய அரசு அறிவித்த கரும்பு விலை எதிரொலி

கடலுார் மாவட்டத்தில் கரும்பு விவசாயிகள் ஏமாற்றம்! மத்திய அரசு அறிவித்த கரும்பு விலை எதிரொலி

நெல்லிக்குப்பம் : மத்திய அரசு அறிவித்த கரும்பு விலை கட்டுப்படி ஆகவில்லை என, மாவட்டத்தில் விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.மத்திய அரசு ஆண்டுதோறும் கரும்புக்கான விலையை அறிவிக்கும். இது அக்., ஒன்றாம் தேதி முதல் செப்., 30ம் தேதி வரை பொருந்தும். மாநில அரசுகள் சூழ்நிலைக்கேற்ப கூடுதல் விலையை அறிவிக்கும். இதனை தனியார் ஆலைகள் வழங்கி வந்தன.ஆனால் கடந்த 2013ம் ஆண்டு முதல் மாநில அரசுக்கு கூடுதல் விலை அறிவிக்க அதிகாரமில்லை எனக் கூறி மத்திய அரசு விலையை குறைவாகவே வழங்கி வருகிறது. இப்பிரச்னையை தீர்க்க மாநில அரசு கூடுதல் விலை அறிவிப்பதை கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்டது.இதற்கு பதிலாக லாபத்தில் பங்கு முறையை கொண்டு வந்தனர். தமிழகத்தில் விவசாயிகளுக்கு தனியார் ஆலைகள் மாநில அரசு அறிவித்த விலையில் வழங்க வேண்டியதில் 1,250 கோடி பாக்கி வைத்துள்ளனர். மத்திய அரசு அறிவிக்கும் விலையை 9 சதவீத பிழிதிறனில் இருந்து 10.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது. கடந்த 2024-25ம் தேதி ஆண்டுக்கு மத்திய அரசு கரும்பு டன் ஒன்றுக்கு 3,400 ரூபாய் விலை அறிவித்தது. ஆனால் பிழிதிறன் அடிப்படையில் சர்க்கரை ஆலைகள் 3,140 ரூபாய் மட்டுமே வழங்கினர். மத்திய அரசின் விலையை உறுதி செய்யும் வகையில் கரும்பு சப்ளை செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசு ஊக்க தொகை வழங்குகிறது.வரும் அக்., மாதம் துவங்கும் 2025-2026ம் ஆண்டுடிற்கான விலையை மத்திய அரசு 3,550 ரூபாய் என, அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட டன்னுக்கு 150 ரூபாய் மட்டுமே அதிகம். இதனால், தமிழக விவசாயிகளுக்கு பிழதிறன் அடிப்படையில் மத்திய அரசின் விலை கிடைக்காது. டன்னுக்கு 3,290 ரூபாய் மட்டுமே கிடைக்கும். இதனால், மத்திய அரசு அறிவித்த கரும்பிற்கான விலை கட்டுப்படி ஆகவில்லை என, மாவட்டத்தில் விவசாயிகள் புலம்பி வருகின்றனர். இதுகுறித்து ஈ.ஐ.டி., பாரி கரும்பு சப்ளையர்ஸ் சங்க இணை செயலாளர் திருமலை கூறியதாவது: இடுபொருட்கள் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை என பல்வேறு பிரச்னைகளை மாவட்டத்தில் கரும்பு விவசாயிகள் சந்திக்கின்றனர். மத்திய அரசு விவசாயிகளின் சிரமத்தை கருத்தில் கொள்ளாமல் ஆலைகளுக்கு சாதகமாக கடந்த ஆண்டைவிட டன்னுக்கு 150 ரூபாய் மட்டும் உயர்த்தியுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழக அரசாவது தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் டன்னுக்கு 4 ஆயிரம் விலை அறிவித்து கரும்பு விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.தற்போதே பல விவசாயிகள் வேலை குறைவான பாமாயில் போன்ற மரப்பயிர்களை பயிரிட துவங்கியுள்ளனர். தமிழக அரசு பழைய நடைமுறையில் கூடுதல் விலை அறிவித்து அதை பெற்று தர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கரும்பு பயிரிடும் பரப்பு அதிகரிக்கும்'என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை