கிரிக்கெட் வீரர்களுக்கு கோடை கால பயிற்சி
கடலுார்: கடலுாரில் கிரிக்கெட் வீரர்களுக்கான கோடை கால இலவச பயிற்சி முகாம் வரும் 21ம் தேதி அண்ணா விளையாட்டு அரங்கில் துவங்குகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் கடலுார் மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து கடலுார் மாவட்ட இளம் கிரிக்கெட் வீரர்களுக்கான கோடை கால இலவச கிரிக்கெட் பயிற்சி முகாம் வரும் 21ம் தேதி மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு அரங்கில் துவங்குகிறது. பயிற்சி முகாம் மே 11ம் தேதி வரை 21 நாட்கள் நடக்கிறது. கிரிக்கெட் சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்குகிறார். காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரையிலும், மாலை 3:00 மணி முதல் 6:00 மணி வரையிலும் நடக்கிறது. பயிற்சியாளர் ராகுல் பயிற்சி அளிக்கிறார். பயிற்சியில் பங்கு பெறும் கிரிக்கெட் வீரர்கள் 19 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பயிற்சியின் போது வெள்ளை நிற உடையும், வெள்ளை நிற காலணியும் அணிந்திருக்க வேண்டும்.ஏற்பாடுகளை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கூத்தரசன் செய்து வருகிறார்.