தடையில்லா சான்றுக்கு லஞ்சம் தாசில்தாருக்கு 2 ஆண்டு சிறை
கடலுார் : மின் இணைப்பு பெற தடையில்லா சான்று வழங்க ரூ. 2,500 லஞ்சம் வாங்கிய தாசில்தார் மற்றும் ஓய்வு பெற்ற வருவாய்த்துறை இளநிலை உதவியாளருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கடலுார் கோர்ட் தீர்ப்பு கூறியது.சிதம்பரம் அடுத்த சிவபுரி கிராமத்தை சேர்ந்தவர் ஆசைதம்பி. இவர், நடராஜர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டிய வீட்டிற்கு மின் இணைப்பு பெற, கடந்த 2012ம் ஆண்டு, சிதம்பரம் தனி தாசில்தார் (கோவில் நிலங்கள்) அசோகனிடம் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்தார். தாசில்தார் அசோகன், சான்றிதழ் வழங்க, ரூ. 2,500 லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து ஆசைதம்பி அளித்த புகாரின் பேரில், கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய நோட்டை, ஆசைத்தம்பியிடம் கொடுத்து அனுப்பினர். பணத்தை பெற்றபோது, தாசில்தார் அசோகன், ஓய்வுபெற்ற இளநிலை உதவியாளர் முனுசாமி ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.இவ்வழக்கை விசாரித்த மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி நாகராஜன், லஞ்சம் வாங்கிய தனி தாசில்தார் அசோகன் மற்றும் ஓய்வு பெற்ற இளநிலை உதவியாளர் முனுசாமி ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.