உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலம் உட்கோட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் ஓட்டம்; கேள்விக்குறியாகும் சட்டம் ஒழுங்கு

விருத்தாசலம் உட்கோட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் ஓட்டம்; கேள்விக்குறியாகும் சட்டம் ஒழுங்கு

விருத்தாசலம் : விருத்தாசலம் உட்கோட்டத்தில் டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர்கள் இல்லாததால், சட்டம் ஒழுங்கு நடவடிக்கை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் உட்கோட்டத்தில், விருத்தாசலம் டவுன், மங்கலம்பேட்டை, ஆலடி, கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி, பெண்ணாடம் ஆகிய 6 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.இதில், விருத்தாசலம், மங்கலம்பேட்டை, பெண்ணாடம் போலீஸ் ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர். விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டில் கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி ஸ்டேஷன்களும், மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டில் ஆலடி போலீஸ் ஸ்டேஷன் உள்ளன.இந்நிலையில் விருத்தாசலம் உட்கோட்ட டி.எஸ்.பி.,யாக இருந்த கிரியாசக்தி, தொகுதி எம்.எல்.ஏ.,வுடன் மோதல் போக்கு காரணமாக கடந்த 6ம் தேதி மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக வேறு யாரும் நியமிக்காததால், அப்பணியிடம் காலியாக உள்ளது.இந்நிலையில், மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், கொலை வழக்கில் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் சமீபத்தில் கடந்த 19ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கு முன்பாக பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குணபாலன், கடந்த 7ம் தேதி மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். அவரைத் தொடர்ந்து, விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், வரும் டிசம்பர் மாதம் ஓய்வு பெறவுள்ள நிலையில், கடந்த 21ம் தேதி மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார்.இதனால், தற்போது விருத்தாசலம் உட்கோட்டத்தில் டி.எஸ்.பி., மற்றும் மூன்று இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால், விரைந்து நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது.எனவே, விருத்தாசலம் உட்கோட்டத்திற்கு டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர்ளை விரைந்து நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை