திருக்குறள் திருப்பணிகள் திட்டம் துவக்கம்
கடலுார்: கடலுாரில் திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தை மாநகராட்சி கமிஷனர் அனு துவக்கி வைத்தார். கன்னியாகுமரியில் நடந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு முழுதும் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக திருக்குறள் திருப்பணிகள் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். இத்திட்டத்தின்படி, மாவட்டத்தில், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு திருக்குறளின் கருத்துக்களை எடுத்துரைக்கும் வகையில் கருத்தரங்கு, பயிலரங்கம், பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக கடலுார் கலெக்டர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு பயிற்றுக் குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் கடலுார், விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட உள்ள பயிற்சி வகுப்பின் துவக்க விழா கடலுார் அரசு பெரியார் கலைக் கல்லுாரியில் நடந்தது.கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் அனு பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து பேசுகையில், 'இளைஞர்கள் தமிழின் வளமையை அறிந்து கொள்வதற்கு மட்டுமல்ல ஆளுமைத் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் திருக்குறள் கருத்துகள் பயன்படும். திருக்குறளைப் படிப்பதோடு நின்றுவிடாமல் அதனை வாழ்விலும் கடைபிடிக்க வேண்டும்' என்றார். விழாவில், தமிழ் வளர்ச்சித் உதவி இயக்குநர் சுப்பலட்சுமி, கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் நடராஜன், ஆறுமுகம், மாவட்டத் தமிழ்ச்சங்கப் பொருளாளர் ரவி, துணைத் தலைவர்கள் சிவக்குமரன், பாஸ்கரன், நாகராஜன், ஜெகதீசன் உட்பட பலர் பங்கேற்றனர்.