உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்கள் முன் கதறிய தந்தை கடலுார் பள்ளியில் சோகம்

மாணவர்கள் முன் கதறிய தந்தை கடலுார் பள்ளியில் சோகம்

கடலுார்: கடலுாரில் பஸ் படியில் நின்று பயணம் செய்தபோது தவறி விழுந்து உயிரிழந்த மாணவரின் தந்தை, பள்ளியில் கதறிய அழுதது, சக மாணவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.கடலுார் அடுத்த தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் மகன் கைலாஷ், 16; கடலுார் ஜெயின்ட் ஜோசப் பள்ளியில், பிளஸ் 1 படித்து வந்தார். இவர் கடந்த 26ம் தேதி, பஸ் படியில் இருந்து விழுந்ததில், பின்பக்க சக்கரம் ஏறி உயிரிழந்தார். இதையடுத்து, பள்ளியில் மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது.கடலுார் புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமை தாங்கி, சாலை விதிமுறைகள் குறித்து மாணவர்களிடம் பேசுகையில், ''உங்கள் பள்ளியில் படித்த மாணவர் கைலாஷ் படியில் பயணம் செய்தபோது, தவறி விழுந்து இறந்தார். இதனால், அந்த மாணவரின் பெற்றோர் குழந்தையை இழந்து தவிக்கின்றனர். எனவே, படியில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். விபத்தில் கை, கால் இழந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது'' என, அறிவுரை வழங்கினார்.நிகழ்ச்சியின்போது, விபத்தில் இறந்த மாணவர் கைலாஷின் தந்தை கண்ணதாசன், மாணவர்கள் முன் கதறி அழுதார். அப்போது, 'பஸ் படியில் பயணம் செய்யாதீர்கள். அப்படி செய்ததால் என் மகனை இழந்து தவிக்கிறோம்' என கண்ணீர் மல்க கூறி, கையெடுத்து கும்பிட்டு வேண்டுகோள் விடுத்தார். இதைப் பார்த்து சில மாணவர்கள் கண்ணீர் சிந்தியதால், அரங்கமே சோகமாக காணப்பட்டது.நிகழ்ச்சியில் டிராபிக் இன்ஸ்பெக்டர் அமர்நாத், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

PARTHASARATHI J S
நவ 30, 2024 06:30

நம் பின்னால் ஒரு குடும்பம் இருக்கு. மருத்துவ செலவு சாதாரணமாக இல்லை. போன உயிர் திரும்ப வராது. சொன்ன பேச்சை கேட்கவும். அனுபவம் தான் ஆசான்.


புதிய வீடியோ