நுாறு நாள் வேலையில் பாரபட்சம் கிராம மக்கள் சாலை மறியல்
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே நுாறு நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்குவதில் பணிதள பொறுப்பாளர் பாரபட்சம் காட்டுவதாக, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. விருத்தாசலம் அடுத்த தொட்டிக்குப்பம் கிராமத்தில் 2000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் நடக்கும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி வழங்குவதில், பணிதள பொறுப்பாளர் பாரபட்சம் காட்டுவதாக கூறி, பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று பகல் 1:00 மணியவளில் விருத்தாசலம் - மு.பரூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.