உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வண்டல் மண் அள்ளிய ஏரி, குளங்களில் எச்சரிக்கை பலகை தேவை: உயிரிழப்பை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா

வண்டல் மண் அள்ளிய ஏரி, குளங்களில் எச்சரிக்கை பலகை தேவை: உயிரிழப்பை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா

விருத்தாசலம்: வடகிழக்கு பருவமழை துவங்கும் நிலையில் வண்டல் மண் அள்ளிய ஏரி, குளங்களில் கிடு கிடு பள்ளங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம் உட்கோட்டங்களில் ஆறுகள், ஏரி, குளங்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் உள்ளன. பருவமழை காலங்களில் நீர்ப்பிடிப்பு கிடைத்து நிரம்பி காணப்படும் இவற்றில் இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் குளித்து மகிழ்கின்றனர்.அதிக ஆழம் கொண்ட ஏரி, குளங்களில் சேறும் சகதியும் மிகுந்த பகுதியில் குளிக்கும் போது, எதிர்பாராமல் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கிறது. இருப்பினும் ஆண்டுதோறும் பள்ளி சிறுவர், சிறுமியர் பாதிக்கப்படுவது குறையவில்லை.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த அண்ணன், தம்பி தண்ணீரில் மூழ்கி இறந்தனர். கடந்த 25ம் தேதி, வேப்பூர் பகுதியில் 11 வயது சிறுவன் குட்டையில் மூழ்கி உயிரிழந்தார். இதுபோல், மங்கலம்பேட்டை, வேப்பூர், கம்மாபுரம் உட்பட மாவட்டம் முழுவதும் சோக சம்பவங்கள் நடந்துள்ளது.

நீச்சல் பயிற்சி தேவை

தனியார் பள்ளிகளில் கராத்தே, டேக்வாண்டோ, சிலம்பம், குதிரை ஏற்றம், நீச்சல் போன்ற பயிற்சிகள் தரப்படுகிறது. அதுபோல், அரசு பள்ளி மாணவர்களுக்கும் தற்காப்பு கலைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். தினசரி ஒரு பாட வேளையில் உடற்கல்வி பாட ஆசிரியர்கள் மூலம் நீச்சல் பயிற்சி, நீர் நிலைகளில் எவ்வாறு குளிப்பது போன்ற பயிற்சியும், விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.

விழிப்புணர்வு தேவை

அதுபோல், ஒவ்வொரு தாலுகாவிலும் அதிக ஆழம் கொண்ட நீர்நிலைகள் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை துவங்கும் நிலையில் நீர்நிலைகள் நிரம்பி வழிய வாய்ப்புள்ளது. அப்போது நீர்நிலைகளில் ஆபத்தான முறையில் குளிக்க கூடாது. தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து அந்தந்த வி.ஏ.ஓ., மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வண்டல் மண்ணால்ஏரிகளில் ஆபத்து

விவசாய நிலங்களை திருத்தவும், மண்பாண்ட தொழிலாளர்கள் நலன் கருதியும் நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், விவசாயிகள் பெயரில் அனுமதி பெற்று, ரியல் எஸ்டேட் தொழிலுக்கு துணையாக விளை நிலங்களில் வண்டல் மண்ணை கொட்டி விற்பனை செய்துள்ளனர்.இதற்காக 10 அடி ஆழத்துக்கு மேல் விதிமுறை மீறலாக தோண்டப்பட்ட பள்ளங்களில், தேங்கி நிற்கும் மழைநீரில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. வண்டல் மண் விற்பனையை தடுக்காத வருவாய்த்துறை அதிகாரிகள், இனியாவது விழித்துக் கொண்டு, சிறுவர்கள் உயிரிழப்பதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

8 சிறுவர்கள் பலி

மங்கலம்பேட்டை அடுத்த எடச்சித்துார் ஏரியில் வண்டல் மண் அள்ளிய பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக சிறுவர், சிறுமிகள் என 8 பேர் இறந்துள்ளனர் என கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இப்பகுதியில் விதிமுறை மீறி வண்டல் மண் அள்ளியும் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை