உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., கூட்டணியில்தான் இருப்போம்; கூடுதல் இடத்திற்கு முயற்சிப்போம் திருமாவளவன் உறுதி

தி.மு.க., கூட்டணியில்தான் இருப்போம்; கூடுதல் இடத்திற்கு முயற்சிப்போம் திருமாவளவன் உறுதி

பரங்கிப்பேட்டை; தி.மு.க., கூட்டணியில் அதிக இடங்கள் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் தி.மு.க., கூட்டணியில்தான் இருப்போம் என வி.சி., தலைவர் திருமாவளவன் கூறினார்.சிதம்பரம் அடுத்த பின்னத்துார் ஊராட்சிக்கு, சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டிமுடிக்கப்பட்டு நேற்று நடந்த விழாவில், மேல்நிலை நீர்தேக்க தொட்டியை, திருமாவளவன் திறந்து வைத்தார். பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசியல் கட்சிகள் கொடிக்கம்பம் நிறுவுவது, கொடியேற்றுவது இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக மரபு. யாரோ ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பது ஜனநாயக முறையை நசுக்குவதாகும். அதை எதிர்த்து நாங்கள் மேல் முறையீடு செய்து இருக்கிறோம்.அந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது. இதை பயன்படுத்திக் கொண்டு சில அதிகாரிகள் வி.சி., கொடி கம்பங்களை அகற்றுவதில் குறியாக இருக்கிறார்கள். இதுபோன்ற தீர்ப்பு இல்லாத காலத்திலேயே வி.சி., கொடியேற்றினால் சட்டம், ஒழுங்கு பிரச்னை வரும் என்று நெருக்கடி கொடுத்தார்கள். தற்போது இந்த தீர்ப்பை வைத்து வேகமாக செயல்படுகிறார்கள். அப்படித்தான் சிதம்பரம் பகுதியில் ஒரு அதிகாரி கொடிக்கம்பத்தை அகற்றும்போது அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தி இருக்கிறார். ஒரு சார்பான இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன். அவர் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மா.கம்யூ., கட்சி அதிக தொகுதிகளை கேட்போம் என்ற கருத்தை சொல்லி இருக்கிறது. நாங்களும் அப்படித்தான் சொல்லி வருகிறோம். கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் கூடுதலாக தொகுதிகளை கேட்பீர்களா என நீங்கள் கேட்கும் கேள்விக்கு நாங்கள் பதில் சொல்கிறோம். ஊடகவியலாளர்கள்தான் இந்த கேள்வியை எழுப்புகின்றனர்.இல்லை இல்லை, நாங்கள் 6 கொடுத்தாலே பெற்றுக்கொள்வோம். அதைவிட குறைவாக கொடுத்தாலும் பெற்றுக் கொள்வோம் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு தேர்தலிலும் எங்களுக்கு கூடுதல் இடம் வேண்டும் என்று கேட்கிறோம். கூட்டணியில் பல கட்சிகள் இடம் பெற்றுள்ளன. எல்லா கட்சிகளையும் அரவணைக்க வேண்டும். அந்த அடிப்படையில் கூட்டணிக்கு தலைமை தாங்குகிற தி.மு.க., தலைவர் எங்களோடு உரையாடும்போது சூழலை கருத்தியும் கூட்டணி நலனையும் கருதியும், வெற்றியையும் கருத்தில் கொண்டு முடிவெடுப்போம். அது பேச்சுவார்த்தையின்போது என்பது இறுதி செய்யப்படும். முன்கூட்டியே சொல்ல முடியாது. நாங்கள் இந்த கூட்டணியில்தான் இருப்போம். முடிந்தவரை கூடுதல் இடத்திற்கு முயற்சிப்போம். திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. தி.மு.க., கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேறுவதற்கு வாய்ப்பே இல்லை. தி.மு.க., கூட்டணியை சிதறடிக்க முடியவில்லை என்ற கவலை அவர்களுக்கு இருக்கிறது. மாநில அரசு நகரங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கி வருகிறது. அந்த வகையில் சிதம்பரம் தொகுதியும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. சிதம்பரம் நகரில் இடிக்கப்பட்ட வீடுகளுக்காக மாவட்ட கலெக்டரிடம் பேசி இருக்கிறோம். பா.ம.க., விவகாரம் அவர்களது உட்கட்சி விவகாரம். இதில் நான் கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றார்.அவருடன், வி.சி., கட்சி இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில செயலாளர் அப்துல் ரகுமான், முன்னாள் எம்.எல்.ஏ., அப்துல் நாசர், மாவட்ட செயலாளர் அரங்க தமிழ் ஒளி, மாநில துணை செயலாளர் முகமது அய்யூப் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை