உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நீலக்கொடி சான்றிதழ் பெறும் பணி துவங்குவது... எப்போது; சாமியார்பேட்டை கிராம மக்கள் எதிர்பார்ப்பு

நீலக்கொடி சான்றிதழ் பெறும் பணி துவங்குவது... எப்போது; சாமியார்பேட்டை கிராம மக்கள் எதிர்பார்ப்பு

கடலுார்: சாமியார்பேட்டை கடற்கரை நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான பூர்வாங்க பணிகள் துவங்கப்படுமா என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர். கடலுார் மாவட்டம், சிலம்பிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சாமியார்பேட்டை கடற்கரை, மாவட்டத்திலுள்ள சுற்றுலா மையங்களில் ஒன்றாகும். உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமான மக்கள் விடுமுறை தினங்களில் இங்கு பொழுது போக்கிற்கு வருகின்றனர். இதனால் சாமியார்பேட்டை கடற்ரையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் திட்டங்களை செயல்படுத்த அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்திய கிழக்குக் கரையோர பகுதியான புதுச்சேரிக்கு தெற்கே 50 கி.மீ., துாரத்திலும், சென்னையில் இருந்து 210 கி.மீ., துாரத்திலும், வங்காள விரிகுடாவின் கோரோமாண்டல் கடற்கரையில் அமைந்துள்ளது. புதுசத்திரத்தின் கிழக்கே கடலுார் மற்றும் சிதம்பரம் ஆகிய இடங்களுக்கு நடுவில் சாமியார்பேட்டை அமைந்துள்ளது. இப்பகுதி சுற்றியுள்ள கடலோர கிராமங்களில் மிகப்பெரியது. இங்குள்ள பெரும்பாலான மக்கள் மீன் பிடி தொழில் செய்கின்றனர். இக்கிராமம் தென்னை மரங்களால் சூழப்பட்டுள்ளது. சாமியார்பேட்டை கடற்கரைக்கு, துாய்மையான கடற்கரைக்கான நீலக்கொடி சான்றிதழ் பெறும் அரசின் அறிவிப்பு, சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அதையடுத்து, தமிழக சட்டசபையில் பட்ஜெட்கூட்டத்தொடரில், தமிழகத்தில் சென்னை திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி, துாத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம், விழுப்புரம் மாவட்டம் புத்துப்பட்டு, கடலுார் மாவட்டம் சாமியார்பேட்டை ஆகிய 6 கடற்கரைகளுக்கு, துாய்மையான கடற்கரை என்பதற்கான நீலக்கொடி சான்றிதழ் பெற முயற்சிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க, 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கை சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை நிறுவனம் ஆய்வு செய்து, இச்சான்றிதழை வழங்குகிறது. சான்றிதழ் பெறுவதன் மூலம், கடற்கரைக்கு அதிகளவு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். தமிழகத்தில் இதுவரை கோவளம் கடற்கரை மட்டுமே நீலக்கொடி சான்றிதழ் பெற்றுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்காக 5.62 கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனுடன் தற்போது சாமியார்பேட்டை கடற்கரை உட்பட மேலும் ஆறு கடற்கரைகள் நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி எடுத்துவருவது சுற்றுபகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் சாமியார்பேட்டை கடற்கரையில் நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான கட்டமைப்பு பணிகள் இதுவரை துவங்காமல் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை