பழுதடைந்த சமுதாய நலக்கூடம் புதுப்பிக்கப்படுமா?
புவனகிரி: பழுதடைந்த சமுதாய நலக்கூடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது. கீரப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இயங்கி வந்தது. அந்த கட்டடம் பழுதடைந்ததால் ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மெயின் ரோட்டில் சகல வசதியுடன் கூடிய புதிய அலுவலகம் கட்டப்பட்டு நடைமுறையில் உள்ளது. பழுதடைந்த பழைய ஒன்றிய அலுவலகத்தை சமுதாயக்கூடமாக மாற்றினர். பிற்காலத்தில் எம்.ஜி.ஆர்., திருமண மண்டபமாக மாற்றப்பட்டது. இந்த மண்டபத்தை சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளியவர்கள் குறைந்த வாடகையில் பயன்படுத்தி வந்தனர். இதனால் அரசுக்கு குறிப்பிட்ட தொகை மாதந்தோறும் வருவாய் கிடைத்ததுடன், மண்டபமும் பாதுகாக்கப்பட்டது. தற்போது முற்றிலும் பாதுகாப்பு இல்லாமல், ஆபத்தான நிலையில் குடியிருப்பு பகுதியில் உள்ளது. விஷ ஜந்துகளின் புகலிமாகவும், சமூக விரோத செயல்களின் கூடாரமாகவும் மாறி உள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர். அத்துடன் மக்கள் வரிப்பணம் விரையமாகி வருகிறது. இந்த சமுதாய நலக்கூடத்தை புதுப்பித்து மீண்டும் பயன்பாட்டிற்கு, கொண்டு வர போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.