பெண்ணிடம் செயின் பறிப்பு திட்டக்குடியில் துணிகரம்
திட்டக்குடி: திட்டக்குடி அருகே வீட்டில் துாங்கிய பெண்ணிடம் தாலி செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். திட்டக்குடி அடுத்த ஈ.கீரனுாரைச் சேர்ந்தவர் சம்பத். விவசாயி. இவரது மனைவி கண்ணகி, 55. சம்பத் வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மருமகள் வீட்டிற்குள்ளும், கண்ணகி, வீட்டின் வராண்டாவில் துாங்கினார். அப்போது, அதிகாலை 3:00 மணிக்கு திடீரென வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், கண்ணகி அணிந்திருந்த ஒன்றரை சவரன் தாலியை பறிக்க முயன்றார். கண்ணகி கூச்சலிட அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் மர்ம நபர் தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பியோடினார். தொடர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த வரதராஜ், 38; என்பவரது வீட்டில் மர்ம நபர் ஓட்டை பிரித்தார். சத்தம் கேட்டு வரதராஜ் எழுந்ததும் மர்ம நபர் தப்பினார். இதுகுறித்து புகாரின் பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.