உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புறவழிச்சாலை அமைக்கும் பணிகள்... தீவிரம்; சிதம்பரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு

புறவழிச்சாலை அமைக்கும் பணிகள்... தீவிரம்; சிதம்பரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு

சிதம்பரம்: சிதம்பரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அண்ணாமலை நகருக்கு செல்லும் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. சிதம்பரத்தில் உலக பிரசித்திப் பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. சிதம்பரம் நகரில் மக்கள் தொகை பெருக்கம், வாகனங்கள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நடராஜர் கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், கோவிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளில், வாகனங்களில் செல்வது பெரும் சவாலாக உள்ளது. அதிலும் வார விடுமுறை நாட்களில் வெளியூரில் இருந்து பல்லாயிரகணக்கானோர், கோவிலுக்கு வருவதால், போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க முடியவில்லை. இதன் காரணமாக, தேரோடும் நான்கு வீதிகள், வடக்கு மெயின்ரோடு, கஞ்சித்தொட்டி, சபாநாயகர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி மட்டுமின்றி, அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. இதனை தவிர்க்க வெளியூரில் இருந்து பஸ் நிலையத்திற்கு வரும் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் நகருக்குள் வராமல் செல்லும் வகையில் தில்லையம்மன் ஓடையை ஓட்டி புறவழிச்சாலை அமைக்க கடந்தாண்டு அமைச்சர் பன்னீர்செல்வம் நடவடிக்கை மேற்கொண்டார்.அதனைத் தொடர்ந்து, பொதுப் பணித்துறை சார்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, 36 கோடி ரூபாய் மதிப்பில் கடந்தாண்டு ஜூன் மாதம், பணிகள் துவங்கப்பட்டது. சிதம்பரம் சோழன் டெப்போ அருகே உள்ள தில்லையம்மன் ஓடையின் இடது பக்கத்தில் சாலை துவங்கி, சிதம்பரம் பஸ் நிலையத்தின் பின்புறம் சென்று, ரயில்வே மேம்பாலம் வழியாக அண்ணாமலை நகர் செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் குறையும். தற்போது வாய்க்காலின் ஒரு கரையில், முழுவதும் தடுப்பு சுவர் கட்டும் பணிகள் முழுதும் முடிவடைந்துள்ளது. பஸ் நிலையத்தின் பின்புறம் மட்டும், சில இடங்களில் பணிகள் முழுமை பெறாமல் உள்ளது. இதுவரை 80 சதவித பணிகள் முடிவடைந்துள்ளது. சாலை போடும் பணிகள் விரைவில் துவங்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ