மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அலுவலருக்கு வாசல் வரை வந்து 'குட்பை'
06-Feb-2025
கடலுார்; பணிச்சுமையால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கடிதம் எழுதி மாயமான, கடலுார் கலெக்டரின் நேர்முக உதவியாளர் மீட்கப்பட்டார்.கடலுார் அடுத்த ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் மகேஷ், 30; திருமணமாகாதவர். கடலுார் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் காலை பணிக்கு சென்ற மகேஷ், மாலை வீடு திரும்பவில்லை.அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது தம்பி ராமன் புகாரின்படி, கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், மகேஷ் எழுதியதாக ஒரு கடிதம் வாட்ஸாப், முகநுால் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது.கடிதத்தில் கூறியிருப்பதாவது:நான் குரூப் - 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, கடந்த ஆண்டு ஆகஸ்டில் பணியில் சேர்ந்தேன். கோப்புகள் மீது சரிவர நடவடிக்கை எடுக்க முடியவில்லை. உயர் அதிகாரிகள், என்னை ஆபாசமாக திட்டுகின்றனர். என் இறப்பிற்கு காரணம் வாரிசு சான்றிதழ் கோப்புகள் தொடர்பான மூன்று பேர் தான். நான் புதிதாக பணியில் சேர்ந்தவன். எனக்கு பயிற்சி அளிக்க தகுந்த ஆட்கள் இல்லை. எனக்கு அதிக வேலைபளு உள்ளது.தற்போது நான் கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டேன். இருப்பினும், கோப்புகளுக்கு நான் தான் பொறுப்பு எனக்கூறி, எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்துகின்றனர். ஆண் வாரிசு வழக்கிற்கு உடனடியாக மேல் முறையீடு செய்ய நடவடிக்கை எடுங்கள். அப்பா, அம்மா என்னை மன்னித்து விடுங்கள். மன உளைச்சலால் என்னால் வாழ முடியவில்லை.இவ்வாறு கூறப்பட்டுஉள்ளது.கடிதம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அதை மகேஷ் எழுதியது உறுதியானது. இதற்கிடையே மகேஷ் நேற்று காலை தன் தாயை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தான் ரயிலில் திருச்செந்துார் கோவிலுக்கு வந்திருப்பதாக கூறியுள்ளார்.தகவலறிந்த திருச்செந்துார் கோவில் புறக்காவல் நிலைய போலீசார், கடற்கரையில் நின்றிருந்த மகேஷை பிடித்து விசாரணை நடத்தினர். அவரை கடலுாருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
06-Feb-2025