உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / காவிரியில் வெள்ள பெருக்கு வரும் முன் ரோந்து : உயிர்பலி தடுக்க நடவடிக்கை அவசியம்

காவிரியில் வெள்ள பெருக்கு வரும் முன் ரோந்து : உயிர்பலி தடுக்க நடவடிக்கை அவசியம்

தர்மபுரி : ஒகேனக்கல் காவிரியில் வெள்ள பெருக்கு ஏற்படும் முன், சுற்றுலா பயணிகளின் உயிர் பலியை தடுக்க, தீயணைப்பு வீரர்கள் ரோந்து பணி மேற்கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கர்நாடகா மாநிலம் குடகுமலையில் உற்பத்தியாகும் காவிரி, தமிழகத்தில் அடிஎடுத்து வைக்கும் இடம் ஒகேனக்கல். பெருக்கெடுத்து ஓடி வரும் காவிரி, ஒகேனக்கல்லில் பாறைகளில் நீர் வீழ்ச்சியாக பெருக்கெடுத்து செல்லும் அழகை கண்டு ரசித்து கொண்டே இருக்கலாம். காவிரியின் அழகை போல், ஆபத்தும் அதிகம் உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் ஆண்டுதோறும், 50க்கும் மேற்பட்டவர்கள் தவறி விழுந்தும், ஆழமான பகுதியில் குளிக்க செல்லும் போது, சுழலில் சிக்கியும் இறப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

காவிரியின் அழகை ரசிக்க வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பாதுகாப்பு வசதிகள் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் இஷ்டம் போல் குளிப்பதும், பரிசல் பயணம் செய்வதும் உயிர் பலிக்கு காரணமாகி வருகிறது. கூட்டமாக வரும் இளைஞர்கள், காவிரியின் அழகை ரசிப்பதாக கூறி மது குடித்து விட்டு, இஷ்டம் போல் காவிரியில் குளிப்பதால், உயிர் பலி தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது. இளைஞர்களை பொறுத்த வரை, ஒகேனக்கல் என்றால் குடித்து விட்டு, கும்மாளம் போடும் இடமாக மாறி வருகிறது.

காவிரி ஆற்றில் பாதுகாப்பான இடங்களில் பயணிகளை குளிக்க சுற்றுலாத்துறையும், உள்ளாட்சி துறையும் நடவடிக்கை எடுக்காததால், ஆழமான மணல் திட்டு, கூட்டாறு உள்ளிட்ட பகுதிகளில் பயணிகள் குளிக்கும் போது, ஆற்று நீரில் அடித்து செல்வதும், சுழலில் சிக்கி பலியாவதும் அதிகம் நடந்து வருகிறது. ஆண்டுதோறும் ஜூலை முதல் வாரத்தில் இருந்து, தென் மேற்கு பருவமழையால், வெள்ள பெருக்கு ஏற்படும். இந்தாண்டு காலதாதமாக துவங்கிய பருவமழை காரணமாக, காவிரியில் மிதமான நிலையில் தண்ணீர் வரத்து உள்ளது. வரும் நாட்களில், காவிரி படுகை பகுதியில் பெய்யும் மழையை பொருத்து தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வெள்ள பெருக்கு காலங்களிலும் மற்ற சாதாரண நாட்களிலும் சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட பாதுகாப்பான இடங்களில் மட்டுமே குளிக்க அனுமதிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். அதே போல், வரையறுக்கப்பட்ட எல்லையில் மட்டும் பரிசல் ஓட்டவும், உரிய கண்காணிப்புக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். தீயணைப்பு வீரர்கள், நீச்சல் தெரிந்த பரிசல் ஓட்டிகள் அடங்கிய ரோந்து குழு அமைக்க வேண்டும். அந்த குழுவினர் காவிரி படுகையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, பாதுகாப்பற்ற பகுதியில் குளிக்கும் பயணிகளை வெளியேற்றுவதோடு, குறிப்பிட்ட இடங்களில் குளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஒகேனக்கல் தீயணைப்பு மீட்பு படையில் ஐந்து பேர்கள் மட்டும் பணியில் உள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் தீயணைப்பு துறையில் உள்ள வீரர்களை சுழற்சி முறையில் ஒகேனக்கல்லில் தற்காலிக பணிக்கு அனுப்பி ரோந்து சுற்ற நடவடிக்கை எடுத்தால், உயிர் பலிகள் தடுக்க வாய்ப்புள்ளது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை