உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க வேண்டுகோள்
அரூர், அரூர் கச்சேரிமேட்டில் இருந்து, தர்மபுரி-, திருப்பத்துார், -சேலம்,- அரூர் நகருக்குள் செல்லும் வழி என, நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இச்சாலை வழியாக ஏராளமான பஸ், லாரி உள்ளிட்ட, ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால், எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்நிலையில், ராஜிவ் சிலை அருகில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின்விளக்கு, கடந்த சில மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இப்பகுதி இருட்டில் மூழ்கியுள்ளது. விளக்குகள் எரியாததால், இரவு நேரத்தை பயன்படுத்தி வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும், குற்ற சம்பவங்கள் நடந்தால், போலீசார் தடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருதி, உயர்கோபுர மின் விளக்கை சீரமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.