| ADDED : ஜன 24, 2024 10:47 AM
தர்மபுரி: தர்மபுரி தாசில்தார் அலுவலகம் அருகே, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். இதில், விவசாயிகளுக்கு பயனில்லாத உழவர் பாதுகாப்பு திட்டத்தை கைவிட வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில், உயிரிழப்பு ஏற்பட்டால், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், கல்வி, மருத்துவம், திருமணம், பிரசவம் போன்ற முக்கிய செலவுகளுக்கு விவசாய தொழிலாளர்களுக்கு எந்த உதவியும் வழங்கப்படுவதில்லை. மற்ற தொழிலாளர்களுக்கு வழங்குவதுபோல், விவசாய தொழிலாளர்களுக்கும், அனைத்து நிதி உதவிகளையும் வழங்க வேண்டும். சிறு, குறு தொழிலாளர்களுக்கு பயனில்லாத, உழவர் பாதுகாப்பு திட்டத்தை கைவிட வேண்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்த விவசாய தொழிலாளர்கள் நலவாரியத்தை, மீண்டும் அமல்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஏ.ஐ.டி.யு.சி., மாநில துணைத்தலைவர் மணி, சி.பி.ஐ., மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தேவராசன், மாநில செயலாளர் பிரதாபன் உள்பட பலர் பங்கேற்றனர்.