ஓசூர், தேன்கனிக்கோட்டையில் அடுத்தடுத்து, 3 வீடுகளுக்குள் புகுந்த மர்ம கும்பல், 14 பவுன் நகை மற்றும் 3.50 லட்சம் ரூபாயை திருடி சென்றது.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை யாரப் தர்காவில் சந்தன குட உரூஸ் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதனால், தேன்கனிக்கோட்டை நகர பகுதி மக்கள் பங்கேற்றனர். இதை பயன்படுத்தி கொண்ட மர்ம கும்பல், தேன்கனிக்கோட்டை டாலர் காலனி பகுதிக்கு சென்று, அங்கிருந்த பேட்டரி கடை உரிமையாளரான நாவாஸ்கான், 42, என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, 11 பவுன் நகை மற்றும் 1.25 லட்சம் ரூபாய், ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்றனர்.அதேபோல், ஹனிவேலி தனியார் லே அவுட்டிற்கு சென்ற மர்ம கும்பல், வெங்கடேஷ், 40, என்பவரது வீட்டிற்குள் புகுந்து, 2 பவுன் நகை, 2.25 லட்சம் ரூபாய், 600 கிராம் வெள்ளி பொருட்களை திருடியது.அவரது வீட்டின் அருகே உள்ள தனியார் நிறுவன மேற்பார்வையாளர் கார்த்திக், 46, என்பவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல், ஒரு பவுன் நகையை திருடியது. அதே பகுதியை சேர்ந்த டிரைவர் ரவி, 46, வீட்டிற்குள் புகுந்த கும்பல், நகை மற்றும் பணம் ஏதும் சிக்காததால், வீட்டில் இருந்த உணவுகளை ருசித்து சாப்பிட்டு விட்டு, தட்டுகளை சுத்தம் செய்து வைத்து விட்டு தப்பியது.தேன்கனிக்கோட்டை நகர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவம் நடந்துள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடிப்பதால், நகை, பணத்தை பறிகொடுத்தவர்கள் கவலை அடைந்துள்ளனர்.