ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்
தர்மபுரி, ஆக. 24-தர்மபுரி அருகே, சேதமான நிலையில் உள்ள ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி அடுத்த கே.நடுஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட கொளகத்துாரில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், ஊரக கட்டடம் பராமரித்தல் மற்றும் புனரமைப்பு திட்டத்தில், 12 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. தற்போது தண்ணீர் வசதி இல்லாததால், இப்பகுதி பெண்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் சுகாதார வளாகத்தில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தால் அருகில் வசிப்போர் அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து, கே.நடுஹள்ளி பஞ்., நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மகளிர் சுகாதார வளாகத்தை மாவட்ட நிர்வாகம் உடனடியாக சீரமைக்க வேண்டுமென, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.