உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பட்டாசு கிடங்கு வெடி விபத்தில் 3 பெண்கள் பலி கம்பைநல்லுார் அருகே பயங்கரம்

பட்டாசு கிடங்கு வெடி விபத்தில் 3 பெண்கள் பலி கம்பைநல்லுார் அருகே பயங்கரம்

கம்பைநல்லுார் : கம்பைநல்லுார் அருகே பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பெண்கள் பலியாகினர்.தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த பூமிசமுத்திரத்தை சேர்ந்தவர் சின்னதுரை, 60. இவரது மனைவி லட்சுமி, 47, மகன் விஜயகுமார், 27, ஆகியோர், கம்பைநல்லுாரில் இருந்து வெதரம்பட்டி செல்லும் சாலையில், பூமிசமுத்திரத்தில் பட்டாசு கிடங்கு மற்றும் விற்பனை நிலையம் நடத்துகின்றனர்.நேற்று கம்பைநல்லுார், அம்பேத்கர் நகரை சேர்ந்த திருமலர், 32, திருமஞ்சு, 30, செண்பகம், 33, ஆகிய மூன்று பேர், கோவில் திருவிழாக்களுக்கு பயன்படுத்தும் வெடிகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.மதியம், 2:00 மணிக்கு திடீரென வெடிகள் வெடித்து சிதறியதில், மூன்று பேரும் உடல் சிதறி பலியாகினர். அவர்களது உடல்கள், 50 மீட்டர் துாரத்திற்கு துாக்கி வீசப்பட்டதுடன், கை, கால், உள்ளிட்ட உடல் பாகங்கள், 200 மீட்டர் துாரத்தில் சிதறிக் கிடந்தன. ஏழு கி.மீ., துாரத்திற்கு வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இரும்பு ஷீட் கூரை போட்ட பட்டாசு கிடங்கு கட்டடம் தரைமட்டமானது. அரூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். தர்மபுரி எஸ்.பி., மகேஸ்வரன் விசாரணை மேற்கொண்டார். கம்பைநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.தர்மபுரி கலெக்டர் சதீஷ், தி.மு.க., - எம்.பி., மணி ஆகியோர் பலியான பெண்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். கலெக்டர் சதீஸ் கூறுகையில், ''பட்டாசு கிடங்கு லைசென்ஸ் பெற்று இயங்கி வருகிறது.பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட மூன்று பெண்களும் விபத்தில் பலியாகினர். ''பலியான பெண்களின், குழந்தைகள் கல்விக்கு, அரசும், மாவட்ட நிர்வாகமும் தேவையான உதவிகளை செய்யும். விபத்துக்கான காரணம் குறித்து, தடயவியல் அறிக்கை வந்தவுடன் தெரிய வரும். மற்ற பட்டாசு ஆலைகளில் உடனடியாக ஆய்வு மேற்கொள்ளப்படும்,'' என்றார்.திருமலர், திருமஞ்சு ஆகியோர் சகோதரிகள். திருமலருக்கு நான்கு பெண் குழந்தைகள். திருமஞ்சு, செண்பகத்திற்கு, மகன், மகள் என தலா, 2 குழந்தைகள் உள்ளனர். விபத்தில் பலியான மூவரின் குடும்பத்திற்கும் தலா, 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி