காட்டு பன்றிகளை சுட அனுமதிக்க வேண்டும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை
தர்மபுரி, ஆக. 24- தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது. இதில் விவசாயிகள் பேசியதாவது: பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும். மின்மாற்றிகளை புதிதாக அமைத்து, 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். ஏரிகளுக்கு நீரேற்று திட்டம் மூலம், தண்ணீர் நிரப்ப வேண்டும். ஏரிகளின் நீர்வரத்து கால்வாய் ஆகிரமிப்புகளை அகற்றி, துார்வார வேண்டும். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் கடத்துாரில் விரிவாக்க மையம் அமைப்பதாக, அறிவிப்பு வெளியானது. அதை உடனடியாக அமைக்க வேண்டும். பாரம்பரிய விதை நெல் ரகங்களுக்கு விபர அறிக்கை வழங்க வேண்டும்.விவசாய நிலத்தை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை சுட அறிவிப்பு வெளியானது. எனவே, அவற்றை சுட அனுமதிக்க வேண்டும். தர்மபுரி பகுதியில் ஓடும் சரண்குமார் நதி ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வார வேண்டும். காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றி, தர்மபுரி மாவட்டத்தில், உள்ள ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்புக்கு கட்டுப்படியாக கூடிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். கால்நடை துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை, கால்நடைகளின் பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து விவசாயிகள் பேசினர். டி.ஆர்.ஓ., பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் பிரியா, தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை (பாலக்கோடு) ரவி, அரசுத்துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.