தர்மபுரி, ஜூன் 30-பாலக்கோடு அடுத்த கொம்மநாயக்கனஹள்ளியில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம், டி.எஸ்.பி., சிந்து தலைமையில் நடந்தது. தர்மபுரி முதல் ஓசூர் வரை பாலக்கோடு வழியாக புதிய தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில், ஜிட்டாண்டஹள்ளி வரை, 90 சதவீத பணிகள் முடிந்துள்ளது. இதில், கனரக வாகனங்கள் முதல், அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சர்வீஸ் சாலையில் வரும் பைக்குகள் ஒரே சாலையில் எதிரெதிரே பயணிக்கும் போது, நேருக்கு நேர் மோதி விபத்து மற்றும் உயிரிழப்புகள் தொடர்கிறது. விபத்தை தடுக்க, பாலக்கோடு டி.எஸ்.பி., சிந்து, தலைமையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் கொம்மநாயக்கனஹள்ளியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், பாறையூர், கொம்மநாயக்கனஹள்ளி, செட்டிஹள்ளி உள்ளிட்ட பொதுமக்களிடையே, டி.எஸ்.பி., சிந்து பேசும்போது, தேசிய நெடுஞ்சாலையில், பைக்குகளை எதிர் திசையில் இயக்கக்கூடாது. தலைக்கவசம் அணிய வேண்டும். மதுபோதையில் வாகனங்கள் இயக்கக்கூடாது. லைசென்ஸ், இன்சூரன்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். சிறுவர்கள் பைக் ஓட்ட அனுமதிக்கக்கூடாது. மேலும், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என, பொதுமக்களிடம் அறிவுறுத்தினார். இதில், பஞ்., தலைவர் கணபதி, பாலக்கோடு இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.